Sexually Transmitted Diseases
பால் வினை நோய்கள்
உறவின் போது உண்டாகும் தொற்றுகளால் உண்டாகக்கூடிய நோய் என்பதால் பெரும்பாலும் இது குறித்த விழிப்பு உணர்வும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி உலகம் முழுவதும் 1 மில்லியன் மக்கள் தினமும் இந்த பால்வினைத் தொற்றுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளது.
உடல் உறவின் மூலம் உண்டாகும் இந்த தொற்று நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்பை உண்டாக்கிவிடும். இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் சமயத்தில் அறிகுறிகள் இல்லாமலும் இருப்பது. அதனால் தான் இது பால்வினை நோய் என்பதை விட பால்வினைத் தொற்று என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 30 மில்லியன் வரை இந்நோய்க்கு உள்ளாகிறார்கள்.
பொதுவாக பால்வினை நோய் என்றால் அது ஹெச்.ஐ.வி தொற்று தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதை தாண்டி பல நோய்கள் இருக்கின்றன. இவை STD (SEXUALLY TRANSMITTED DISEASES) என்று அழைக்கப்படுகிறது. சில வகை நோய்களை குணப்படுத்திவிடலாம். சில வகையான நோய்களை குணப்படுத்தவே முடியாது. கொஞ்சம் அசந்தால் உயிரையே பறித்துவிடக்கூடும். அதனால் தான் பால்வினை தொற்று குறித்து அனைவரும் குறிப்பாக தம்பதியர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நோய் குறித்து யாரும் வெளியில் பேசுவதையோ விவாதிப்பதையோ விரும்புவதில்லை. மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை செய்வதையும் கூட தவிர்த்து விடுகிறார்கள். இதனால் தான் பலரும் இந்த தொற்றுக்கு உள்ளாவதே தெரியாமல் தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருகிறார்கள்.
வெவ்வேறு வகையான பால்வினை நோய்கள்:
பால்வினை நோய்கள் உடலுறவால் உண்டாகிறது. ஆனால் இதனால் மட்டும் அல்லாமல் இரத்தம் மூலமாகவும் பரவலாம்.
முதல் வகை பால் வினை நோய்கள்:
ஹெச்.ஐ.வி
ஹெபடைட்டிஸ் பி (கல்லீரல் அழற்சி)
சிபிலிஸ்
இவை அனைத்தும் இரத்தத்தின் மூலமாகவும் பரவலாம்.
இரண்டாம் வகை பால் வினை நோய்கள்:
ஹெர்பிஸ்
கொனோரியா
கிளமிடியா
எல்.ஜி.வி
இவை அனைத்தும் உடல் உறவில் மட்டும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தல், முத்தமிட்டு கொள்ளுதல், எச்சில் மூலமும் இந்த வகை தொற்று நோய் பரவுகிறது.
நோய் பரவும் விதம்:
99 % பால் வினைத் தொற்றுகள் உடல் உறவு மூலமாத் தான் வருகிறது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் பால்வினைத் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாடு மாறும் போது ஒரு ஆண் பல பெண்களிடம் உறவு கொள்ளும் போது இந்த தொற்று எளிதாக வருகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் உறவு கொள்ளும் ஆணுக்கு அந்த தொற்று பரவுகிறது. அவனிடமிருந்து மனைவிக்கு பரவுகிறது. மனைவி பிரசவித்த நிலையில் இருந்தால் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலமாக இந்த தொற்று பரவிவிடுகிறது.
அறிகுறிகள்:
ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஒவ்வொரு அறிகுறிகள் உண்டு. சில தொற்றுக்கு அறிகுறிகளே இருக்காது.
வாயைச் சுற்றி கொப்புளம் அல்லது புண்கள்
பெண்கள் உறுப்பில் துர்நாற்றம்
கொனோரியாவாக இருந்தால் அந்தரங்க உறுப்பில் சீழ் வடியும்
தாங்க முடியாத வலி
உறுப்பில் சிறிது சிறிதாக நீர்க்கசிவு
இவை அதிகமாகும் போது அந்தரங்க உறுப்பில் ஒருவகையான பேன் காணப்படும்
கொனோரியா தொற்றாக இருந்தால் பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை மூன்றிலும் பாதிப்பை உண்டாக்கலாம்.
உடல் உறவின் போது அதிகப்படியான வலி
ஹெர்பிஸ் தொற்றையும் அது உருவாக்கும் வலியை கொண்டு கண்டறியலாம்
சிபிலிஸ் என்னும் தொற்று எந்தவிதமான அறிகுறிகளையும் அவ்வளவு எளிதில் காண்பிக்காது.
செய்யவேண்டியவை:
பால்வினை தொற்றுகள் முதலில் பாதிப்பை வெளிப்படுத்துவது அந்தரங்க உறுப்பில் தான். இதில் உண்டாகும் மாற்றத்தை உடனடியாக கண்டு சிகிச்சை பெற வேண்டும். பால்வினைத் தொற்றாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும் இருவருக்குமே சிகிச்சை தேவைப்படும். இனி பால்வினைத் தொற்று உண்டாக்கும் நோய்களை தனித்தனியாக விரிவாக பார்க்கலாம்.