சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா

சர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம்

அந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பணிகள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது.

அதுபோல் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுவதும், ருசியின் அடிப்படையிலேயே இன்று உணவுகளை உண்பதுமான சீரழிவு நம்மிடையே புகுத்தப்பட்டதின் விளைவால் நம்மால் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண முடியாத சூழல் உருவாகிவிட்டது. அதில்லாமல் இன்று எதுவெல்லாம் சுவையாக இருக்கிறதோ அதை மட்டும் சாப்பிடுவதால் இன்று நீரிழிவு என்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் முதலிடம் எனக் கூறக்கூடிய அளவிற்கு அபாரமாக வளர்ந்து இன்று ஒவ்வொரு மனிதனையுமே நடைப்பிணமாக மாற்றக் கூடிய அளவிற்கு மாறிவிட்டது.

ஒரு காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது கிராமங்களில் பார்ப்பது மிக அரிதாக இருக்கும். இன்று அந்தக் கிராமங்களுக்கு அருகில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே மாதக்கணக்கில் மருந்து வாங்கக் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகரித்து விட்டது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது நகர்ப்புறத்தில் எடுக்கக் கூடிய உணவுகளையே இன்று கிராமத்து மக்களும் எடுத்துக்கொள்வதால், நகர்ப்புறத்திற்கு இணையான நோயும் நொடியும் பல்கிப்பெருகி விட்டது. அதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் உடல் நலம் பெற்ற, வீரம் செறிந்த இளைஞர்களைப் பார்ப்பது மிக அரிதாகி விட்டது.

என்னென்றால், சமீபத்தில் சர்க்கரை நோய் ஒரு பக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் இன்று இதயநோயின் பாதிப்பு தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும் போது பெரும்பாலும் இதயநோய் தனியாக வருவதில்லை. உடல் நலம் என்பது ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், ரத்தம் கெட்டுப்போகாத நிலையில் இருக்கும் போதும், கல்லீரல் ஒழுங்காக வேலை செய்யும் போதும், சிறுநீரகம் சரியாக வேலை செய்யும் போது இதயம் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் வருவது கிடையாது.

அதுபோல் இதயநோய் என்பது ஒரே நாளில் உருவாகி விடுவதும் கிடையாது. பெரும்பாலும் பார்த்தோம் என்றால் சர்க்கரை நோய் இருக்கக் கூடிய நோயாளிகளுக்கு, இந்த நோயினால் பாதிப்பு அதிகமானால் இதன் சார்பு நோயாக இதய நோய் வரும். சர்க்கரை நோய் வந்தால் உணவுக்கட்டுப்பாடு வேண்டும். ஆனால் ஒரு நோய் வந்த பின்புதான் எதுவெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறோமோ அதை எல்லாம் சாப்பிடக்கூடிய எண்ணம் இங்கு அனைவருக்கும் இருக்கிறது.

சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு நிச்சயமாக இதய நோய் வருவதற்கான கூறுகள் அதிகம் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் ஒரு சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் உணவில் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் அளவை முழுமையாகக் குறைக்கும் போதுதான் இது மற்ற பரிமாணமாக மாறாது. அதிகபட்ச மாவுச்சத்தை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடும் போது நம் உடல் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதை ”லிபிட் புரோபைல்“ என்று கூறுவார்கள். அந்த லிபிட் புரோபைலில் டிரை கிளிசரைட்ஸ் என்ற சத்து அதிகமாகி விடும். ஒரு மனிதனுக்குச் சராசரியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டிய டிரை கிளிசரைட்ஸ் அளவு 150 –க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த 150 அளவை விட அதிகமாக மாறும் போதுதான் இதயத்திற்குச் செல்லக் கூடிய ரத்தக்குழாய்களில் இந்தக் கொழுப்புப் பரிமாணம் அதிகமாகி இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

ஆக சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் கண்டிப்பாக இதயநோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால் எச்சரிக்கையாக உணவு விசயத்தில் இருக்க வேண்டிய காலம் இது. சர்க்கரை நோய் வந்தது என்றால் இந்த நோயை மட்டுமே கட்டுப்படுத்துவது பிரச்சனை இல்லாமல் இருக்கும். சர்க்கரை நோயின் சார்பு நோய்கள் என்று பார்க்கும் போது இதயநோய்க்குத்தான் முதலிடம்.

அடுத்து சிறுநீரக நோய், கல்லீரல் நோய், கண்பார்வைக் கோளாறு, பாத நரம்புகள் மரத்துப்போவது, அதாவது கேங்கரின் என்று சொல்லக்கூடிய புண் காலில் வரும். அதன் பின் கண்ணில் ஹைப்போ கிளேசீமியா என்ற நோய் வரும். ஆக இந்தப் பிரச்சனை எல்லாம் சர்க்கரை நோயினால் வரக்கூடியது. சிலருக்கு இந்த சர்க்கரை நோயினால் மேலும் பக்கவாதம் வரலாம், ரத்த அழுத்தம் வரலாம். இவ்வளவு நோய் வரும் எனக் கூறுவது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல. நம்மை முன்னெச்சரிக்கையாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தே இதைக்கூறுகிறேன். ஆக உணவுகளை ஒழுங்கு செய்தால் இந்தப் பிரச்சனைகளை நாம் சரி செய்யலாம். ஒரு வேளை சர்க்கரை நோய் வந்தவருக்கு இதயநோய் வந்துவிட்டது என்றால் அப்போது சர்க்கரை நோயாளி எப்படி எல்லாம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? என்பதைப் பார்ப்போம். இன்று தமிழகத்தில் எதையும் தாங்கும் இதயத்தோடு இருந்த தமிழர்களுக்கு இதயநோய் வந்துவிட்டது என்றால் கூனிக்குறுகி வீட்டிலேயே முடங்கக்கூடிய சூழலை இன்றைய மருத்துவ உலகம் உருவாக்கி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

ஏன் அப்படி என்றால், இதய நோய் வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதன் அடர்த்தி சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆங்கில மருந்துகளை, வாய்வழி மருந்துகளை கொடுத்துப் பழக்கப்படுத்திவிடுகிறார்கள். இன்றைய கால நவீன மருத்துவர்கள் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது உணவின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும். உணவின் அவசியத்தை எடுத்துக்கூறாமல் இட்லி, பொங்கல், பூரி, எண்ணெயில் வறுத்ததைச் சாப்பிடலாம். ஆனால் நாங்கள் கொடுத்த மருந்தை எல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

ஒரு நோய் ஒரு மனிதனுக்கு வருகிறது என்றால் கண்டிப்பாக உணவு ஒவ்வாமையால் மட்டும் வருமே தவிர வேறு எதனாலும் வரக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. அதற்கடுத்து மருந்துகளினாலும் சில நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அது என்னவென்றால் உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இதயநோயாளிக்கு சிகிச்சை அளிப்பது கூடாது. உணவைப் பிரதானப்படுத்தி மருந்தின் அளவைக் குறைக்கும் போது இதய நோய்களைச் சரி செய்ய முடியும். அதனால் சர்க்கரை நோய் வந்து இதயநோய்க்கு ஆட்பட்ட அன்பர்கள் கண்டிப்பாகத் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு என்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம் என்று பார்க்கும் போது தினசரி ஒரு கீரையை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகளில் நல்ல நார்ச்சத்து இருக்கிறது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். அது போல் இந்தக் கீரைகளில் “குளோரோபில்” என்று சொல்லக்கூடிய ஒரு சத்து உண்டு. இச்சத்து இதயநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அதற்காக இதய நோய் வந்துவிட்டது என்றால் நிறைய மருந்துகள் எடுக்க வேண்டும். இந்த மருந்துகள் எடுத்துக்கொண்டு மருந்து கூடவே அடிமைத்தனமாய் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நம் உடலுக்கு நோய் என்று வந்த பின்பு பகுத்துப் பார்க்கக் கூடிய தன்மை நமக்கு வரவேண்டும். நமக்கு நாமே இதைச் சுய பகுப்பாய்வு செய்து பார்த்தோமானால் மருந்துகளிலிருந்தும், மருத்துவர்களிடமிருந்தும் நிச்சயமாக விடுதலை பெறலாம். அதற்காகத்தான் நாம் நிறைய உணவுகளைப் பற்றியே பேசுகிறோம். அதனால் இதய நோயாளிகளுக்கு நாம் பட்டியலிடக் கூடிய தமிழர் உணவுகள், தமிழர்கள் பயன்படுத்திய சித்தர், உணவியல் மருந்துகள் என்னென்ன? என்பதைப்பற்றி இனி பார்ப்போம்.

நம் இதயம் எப்போதுமே உணர்ச்சிகரமானது, மிகவும் மென்மையானது, எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியாத நிலை கொண்டதே இதயம். அதனால்தான் மன உளைச்சல், மன அழுத்தம், இருந்தால் முழுமையாக பாதிக்கப்படுவது இதயமே. நல்ல நண்பன் நமக்குத் துரோகம் செய்தாலோ, குடும்பச்சிக்கலினாலோ, எதிர்பாராத தோல்விகளினாலோ, முழுமையாகப் பாதிக்கப்படக்கூடிய உறுப்பு எதுவென்றால் இதயம் தான். அவ்வளவு உணர்ச்சிமிக்க இதயத்திற்கு, சித்தர்கள் உணர்ச்சிவசமான மருந்துகளை அந்தந்தக் காலத்திலேயே கூறியிருக்கிறார்கள்.

அந்த மருந்துகள் என்னவென்றால் ‘மான்கொம்பு பஸ்பம்’ என்ற ஒன்று உண்டு. தவிர “சிறுங்கி பஸ்பம்” என்றும் உண்டு. இந்த சிறுங்கி பஸ்பமானது மானின் கொம்புகளில் இருந்து எடுக்கக்கூடிய மருந்தாகும். அதாவது மானின் கொம்பை நறுக்கி இதனுடன் அகத்திக்கீரைச்சாற்றைப் போட்டு நன்கு அரைத்து துவையல் மாதிரி செய்து, இதை ஒரு மண்பானையில் வைத்து, இந்த மண்பானை மேல் ஒரு மண் பானையை கவிழ்த்து, இதைத் துணியால் நன்கு சுற்றி, சாண எருவை அடுக்கிய பின் இதில் அப்பானையைப் புடம் போடுவர். இதன் பின் உள்ளிருக்கும் மான்கொம்பு பஸ்பமாக மாறிவிடும். இது சித்த மருத்துவத்தில் உள்ள மிக அருமையான ஒரு மருந்து சிறுங்கிப் பஸ்பமாகும்.

மான்கொம்பில் இருக்கக்கூடிய சுண்ணாம்புச்சத்தை (கால்சியம்) மருந்தாக மாற்றி உடலில் இருக்கும் சூட்டைத் தணிக்கும் அகத்திக்கீரையால் அரைத்து இதை மருந்தாக மாற்றி தினசரி இரண்டு வேளை சிட்டிகை அளவு காலை, இரவு வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ஒரு முழுமையான பலன் கிடைப்பதோடு இதயம் பலம் பெரும் என்று சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர். ஏன் மாட்டுக்கொம்பில் சித்தர்கள் பஸ்பம் செய்திருக்கலாம் அல்லது பிற மிருகங்களின் கொம்புகளில் இருந்து சித்தர்கள் இதைச் செய்திருக்கலாமே! ஏன் மான்கொம்பில் செய்தார்கள்? என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மானை ஏன் சித்தர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் மான் ஒரு உணர்ச்சிப் பூர்வமான விலங்கு. ஆபத்து நேரத்தில் மிக வேகமாய் ஓடக்கூடிய தன்மை உண்டு. ஆனால் இந்த மானை ஒரு இடி இடித்தால் கூட சில வேளைகளில் இறந்துபோகும் வாய்ப்பு உண்டு. அதனால் இந்த உணர்ச்சியுள்ள மானின் கொம்பில் உள்ள சுண்ணாம்புச்சத்தை எடுத்து இதயத்தை வலுவாக்குவதற்காக சித்தர்கள் பஸ்பமாக மாற்றிக் கொடுத்தார்கள்.

இன்று நவீன ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒரு முறை என்னவென்றால் இதயத்தைத் தாங்கியிருக்கக்கூடிய, அதாவது இதயத்திற்கு வெளிப்புறமாக இருக்கக்கூடிய, பெரிக்கார்டியம் என்று சொல்லக்கூடிய இதய உறையானது பழுதுபடாதவரை இதயத்திற்கு எந்தப்பாதிப்பும் கிடையாது. இந்தப் பெரிக்கார்டியம் என்பது முழுக்க முழுக்க சுண்ணாம்புச்சத்தால் நிறைந்த ஒரு உறுப்பு. அதனால் இந்தப் பெரிக்கார்டியத்தைப் பாதுகாக்கக்கூடிய தன்மை எதற்கென்றால் மானின் கொம்புகளுக்கு உண்டு. அதனால் சிறுங்கிப் பஸ்பம் என்பது இன்றைக்கும் உலகளாவிய அளவில் சித்தமருத்துவத்தை, சித்தஉணவியல் மருத்துவத்தை முழுமையாக நம்பக்கூடிய நம் தமிழர்கள் நிச்சயமாக அருந்தி வருகிறார்கள்.

இது கூடவே சித்த மருத்துவத்தில் ‘ஏலாதி சூரணம்’ என்பர். ஏலாதி என்றால் ஏலக்காயைப் பிரதானப்படுத்திப் பண்ணக்கூடிய ஒரு சூரணமாகும். இந்த ஏலாதி சூரணத்தையும், சிறுங்கிப் பஸ்பத்தையும் வைத்துச் சாப்பிடும் போது எப்படிப்பட்ட இதய நோயாக இருந்தாலும் முழுமையாகக் குணமாகிறது. தற்போது எடுத்ததெற்கெல்லாம் ஆஞ்சியோ பண்ணுவது, பைபாஸ் சர்ஜரி பண்ணுவது இதெல்லாம்விட, சுயமாக நம்மை நாமே பரிசோதித்துக் கொண்டால் பல மருந்துகளை நாம் தவிர்க்க முடியும்.

ஆகையால் தான் நம் இதயம் மிக உணர்ச்சிப்பூர்வமான உறுப்பாகும். அப்போது அறிவானது எது என்று பார்த்தோமானால் உலகத்தில் மலர்ந்து கிடக்கின்ற அத்தனை மலர்களும் உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியது. ஒரு அழகான மலர் பூத்துக்குலுங்கினால் “வா என்னைப் பார்” எனச் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கும். ஒரு நந்தவனத்தில் நாம் நடந்து செல்லும் போது பல மலர்களைக்கண்டு நாம் இதமாகிப் போகிறோம். அதனால் இந்த பூக்களே மருந்தாகும் பொழுது இதயம் வலுவடையும் எனச் சித்தர்கள் அறிந்தனர்.

இதனால் சித்தர்கள் கமலம் என்று அழைக்கக்கூடிய தாமரைப் பூவை இதய நோய்க்குத் தேர்ந்தெடுத்தனர். இந்தத் தாமரைப்பூவிலிருந்து செய்யக்கூடிய கசாயமானது இதயத்தை வலுப்படுத்தும். தவிர ஆவாரம் பூ, ரோஜாப்பூ தாமரைப் பூ, செம்பருத்திப் பூ இந்த நான்கு பூக்களையும் சம அளவு எடுத்து அதாவது 50 கிராம் அளவு எடுத்து இதனுடன் 10 கிராம சுக்கு, 10 கிராம் ஏலக்காய் சேர்த்து தினசரி டீத்தூள் போல செய்து சாப்பிட்டோம் என்றால் இதயம் வலுவாகும்.

இந்தப் பூக்களிலும் சுண்ணாம்புச்சத்து எனச் சொல்லப்படும் கால்சியம் உண்டு. எப்போதுமே ஒரு மனிதனுக்குப் போதுமான அளவு கால்சியம் இருந்தால்தான் அவர்கள் முகத்தில் ஒரு சிரிப்பைப் பார்க்க முடியும். இந்தச்சத்து குறைவானால் சிரிப்பு சுருங்கிவிடும் என கிராமங்களில் கூறுவர். உடலில் உள்ள எலும்பு தனது வன்மையை இழந்துவிட்டது என்றால் நிச்சயமாக மனிதனின் மகிழ்ச்சி குறைந்து விடும். அதனால் மனிதர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் இருக்க வேண்டும். அதே நேரம் இதயம் நன்றாக இருக்க வேண்டும். இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதயத்தைச் சுற்றி உள்ள சுண்ணச்சுவர் நன்றாக இருக்க வேண்டும். இந்தச் சுண்ணச் சுவரை ஒழுங்குபடுத்தக்கூடிய தன்மை பூக்களுக்கு உண்டு. அதனால் இந்தக் கசாயத்தைத் தொடர்ந்து சாப்பிடும்பொழுது அற்புதமான பலன் கிடைக்கும்.

அதனால் பூக்களிலிருந்து கிடைக்கக் கூடிய சுண்ணாம்புச் சத்தால் இதய உறை பாதுகாக்கப்படுவதால் இதயம் வலுவடையும். எந்த ஒரு மனிதனுக்கு இதயவலு இருக்கிறதோ அவனால் தான் தீர்க்கமான சிந்தனையைப் பெற முடியும். இந்த தீர்க்கமான சிந்தனையைச் செயல்முறைப்படுத்தினால் அதற்கு இதயவலு கண்டிப்பாக வேண்டும். அதற்காக இதயத்திற்கு வலு சேர்க்கும் உணவுகளில் பூக்களுக்கு முக்கியப்பங்கு உண்டு. பண்டைய தமிழர்கள் உணவில் பார்த்தோமென்றால் செம்பருத்திப்பூ பருப்புக்கஞ்சி உண்டு. செம்பருத்திப்பூ இதயத்திற்கு நல்லது என்று இன்றைய நவீன விஞ்ஞானம் ஒத்துக்கொண்டுள்ளது. அதனால் இந்த செம்பருத்திப் பூவையும், சிறு பருப்பையும், அரிசியையும் போட்டு பருப்புக்கஞ்சி போல செய்து சாப்பிட்ட தமிழ்ச் சமூகம் இருந்தது.

அது போல உணவுகளை உண்ணும்போது உணர்ச்சிப்பூர்வமான வாழ்க்கை வாழ்ந்தனர். அன்று பார்த்தோமானால் ஒரு காலகட்டத்தில் ஒரே வீட்டில் 15 பேர் உட்கார்ந்து உண்ட கூட்டுக்குடும்ப அமைப்பு இருந்தது. இன்றைக்கு ஒரு நான்கு பேர் ஒரு குடும்பத்தில் இருந்தால் கூட ஒற்றுமையாக இருக்க முடியாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. அந்தக்காலத்தில் கூட்டமைப்பு முறையில் குடும்பங்கள் இருந்ததால் நிறைய திருவிழாக்கள் நடந்தது. இந்தத் திருவிழாக்கள் அவர்களின் மழுங்கிப்போன உணர்ச்சிகளை கூர்மைப் படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே இருந்தது. இன்றைக்குப் பார்த்தோமானால் தமிழ்நாட்டில் திருவிழாக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்து மனிதர்களின் உணர்ச்சிகள் மழுங்க ஆரம்பித்துவிட்டது.

அன்று திருவிழாவின் போது வீடுகளில் பலகாரம் சுடுவார்கள். எங்க வீட்டில் பனியாரம், அதிரசம் போட்டாங்க, உங்க வீட்டில என்ன பலகாரம்? என்று பகிர்ந்துகொண்டு உண்பார்கள். அதுபோல் கிராமத்தில் கூட்டஞ்சோறு ஆக்கி கூடிச்சாப்பிடுவர். இது போல் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் முறையின் போது உணர்ச்சிகள் பரிமாறப்பட்டது. இன்று இந்த உணர்ச்சிகள் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்துபோன காரணத்தினால் அவனது வாழ்க்கைப் பாதை மாறி இதயநோய் வரக்கூடிய வாய்ப்பும் அதிகமாகிப்போனது. அதனால் உணர்வுரீதியான பகிர்வு இங்கே வேண்டும்.

இந்தப் பூக்களை மருந்தாக எடுத்துக்கொள்ளக்கூடிய மக்கள் கண்டிப்பாக உணர்ச்சியோடு இருப்பார்கள். இவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களும் வராது. அதுபோல் உணவுகளில் உளுந்தங்களி, வெந்தயக்களி இதில் உள்ள சுண்ணாம்புச்சத்தை எவனொருவன் மருந்தாக மாற்றுகிறானோ நிச்சயம் இதயவலுவோடு இருக்கலாம். நம் உடலுக்கு உளுந்தானது திடகாத்திரமான உணவாகும். இந்த உளுந்தை பலர் இன்று இட்லிக்கும், தோசைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தவிர உளுந்தை இன்று கடுகோடு சேர்த்து தாளிக்கின்ற ஒரு பொருளாக மாற்றிவிட்டோம். இந்த உளுந்தை என்று நாம் பிரதான உணவாக மாற்ற ஆரம்பிக்கிறோமோ அன்று தேகக்கட்டு வரும். எலும்பு முறிந்தால் கூட நாட்டுக்கோழி முட்டையையும், இந்த உளுந்தையும் வைத்து உடலில் பத்துப்போடும் போதுதான், உடைந்த எலும்பு கூட, கூடும் தன்மை வருகிறது.
அப்போது ஏன் நாம் உளுந்தை உணவாகச் சாப்பிடக் கூடாது? அதனால் இதய நோய்க்கு மற்றொரு மருந்தே உளுந்து. சித்தர்கள் உளுந்துச் சோற்றை உளுந்தோதனம் என்று கூறுவர். நான்கு பங்கு அரிசியும், ஒரு பங்கு உளுந்தும், கொஞ்சம் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு உளுந்துச் சோறாக வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து இதயநோயாளிகள் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் இதய நோய் முற்றிலும் குணமடையும்.

தவிர ஒரு மரத்தின் அபரிமிதமான சத்துக்கள் எல்லாம் மரப்பட்டையில் தேக்கி வைக்கப்படும். இந்தப் பட்டைகள் எல்லாமே துவர்ப்பானது. அதனால் மருதம்பட்டை, ஆவாரம் பட்டை இந்த இரண்டு பட்டையையும் கொதிக்க வைத்துத் தொடர்ந்து சாப்பிடும் போது சர்க்கரை நோயும் கட்டுப்படும். அதே நேரம் இதய நோயும் குணப்படும்.

சர்க்கரை நோயோடு இதயநோயும் சேர்ந்தது என்றால் மனிதனின் முழுச்செயல்பாடும் தடைபடும். வெளியூருக்குத் தானாக போக முடியாது. ஒரு பயம் தானாகவே கவ்விக்கொள்ளும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இதயநோய் வந்தது என்றால் அவரின் நரம்புகள் பலகீனப்படும். ஆகையால் நரம்பு பலகீனப்படும்போது நேர்மறை சக்தி முழுமையாகக் குறையும். அதனால் அவரால் கூட ஒரு காரியம் ஆற்ற முடியாது. அடுத்தவர் உழைப்பில் எப்படி முன்னேறலாம் என்ற குறுக்குப் புத்தியும் வரும்.

ஆரோக்கியமாக இருக்கும் மனிதரால்தான் ஆரோக்கியமாகச் சிந்திக்க முடியும். ஆரோக்கியமான சிந்தனையால்தான் ஆரோக்கியமான சமூகத்தை நாம் உருவாக்க முடியும். அதனால் இதயநோய் வந்துவிட்டது என்றால் பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், இன்று இருக்கும் நவீன மருத்துவர்களிடம் சென்று அடிமையாகாதீர்கள். உங்கள் உணவை சீர்படுத்துங்கள். ஏனென்றால் இந்தியாவிலேயே (கிரானிக் டிசீசஸ்) எனப்படும் தீராத நோய் விதைக்கப்படுகிறது. இதைத்தான் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.

நவீன மருத்துவம் என்ற போர்வை நம் மக்கள் மீது போர்த்தப்படுகிறது. அங்கே நம் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. இதயநோயாளிகளுக்கு விற்பனையாகக்கூடிய மருந்துகளைப் பார்த்தீர்கள் என்றால் வெளிநாடுகளில் இருந்து இங்கே முதலீடு செய்து பண்ணக்கூடிய மருந்துகளாக இருக்கும். இந்த மருந்துகளை எல்லாம் நாம் கூட்டம் கூட்டமாகச் சென்று வாங்கும் பொழுது நிச்சயம் நம் நிதி ஆதாரம் நவீன மருந்துகளால் கொள்ளையடிக்கப்படும்.

இச்சூழலில் பழைய பாட்டி வைத்தியம் ஏன் வரக்கூடாது. ஒரு அஞ்சறைப் பெட்டியிலேயே முழுமையான மருத்துவத்தைப் பார்த்த சமூகத்திலே நாம் பிறந்து வளர்ந்தவர்கள். சித்தர்கள் சொன்ன சித்த மருந்துகளை மீண்டும் நாம் உயிர்ப்பித்து பயன்படுத்த வேண்டும். நான் கூறிய ஏலாதி சூரணம், தாலிசாதி சூரணம், பஞ்ச தீபாக்னி சூரணம், சிறுங்கி பஸ்பம் இந்த நான்கு விதமான மருந்துகளை உண்டாலே இதயநோய் சரியாகிவிடும்.

அதுபோல் நெல்லிக்காய் லேகியம், தேத்தாங்கொட்டை லேகியம், வெள்ளைப்பூசணி லேகியம் இந்த மருந்துகள் அபரிமிதமான பலன் தரக்கூடியது. இதயநோய் வந்தது என்றால் இதயத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்நோய் வந்தால் ஒரு வேளை உணவு கீரை கஞ்சியாக இருக்க வேண்டும். ஒரு வேளை உணவு கீரையோடு சேர்ந்த அரிசி உணவாக இருக்க வேண்டும். இதுபோல் உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோயால் இதய நோய் வந்தது என்றால் சர்க்கரையையும் குறைக்க வேண்டும், முழுமையான உணவுக்கட்டுப்பாடும் வேண்டும். உணவில் நிறைய நார்ச்சத்துகள் உணவை எடுக்க வேண்டும். நார்ச்சத்து உணவு எதுவென்று பார்த்தோமானால் பண்டைய தமிழர் பயன்படுத்திய வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், வெள்ளைச்சோளம், கேழ்வரகு இவை எல்லாம் அற்புதமான பலன் உள்ள சிறு தானியங்களாகும். இந்த மாதிரியான உணவுகளை தொடர்ந்து எடுங்கள். நான் கூறிய மருந்துகளையும் விடாமல் எடுங்கள். கண்ட நவீன மருந்துகளை உண்பதை நீக்கிவிட்டு சுயசிந்தனையோடு யோசித்து செயல்படுங்கள். எளிமையான வேலைகளைச் செய்யுங்கள், இலகுவாக இருங்கள், இதன்படி இருந்தால் இதயநோயோடு சர்க்கரை நோயையும் வெல்லலாம். மறுபடியும் தமிழர்கள் நோயின்றி நல்ல வாழ்க்கை வாழலாம் நன்றி.

X